உ.பி.யில் 10 மாநிலங்களவை வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு

உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த 10 வேட்பாளர்களும் திங்கள்கிழமை போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.
இதில் பாஜக வேட்பாளர்கள் 8 பேர், சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளிலிருந்து தலா 1 வேட்பாளர் தேர்வாகியுள்ளனர்.
பாஜகவிலிருந்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, அருண் சிங், ஹரித்வார் துபே, பிரிஜ் லால், நீரஜ் சேகர், கீதா சக்யா, சீமா திவிவேதி மற்றும் பி.எல். வர்மா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். சமாஜவாதியிலிருந்து ராம் கோபால், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து ராம்ஜி கௌதம் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இதில் 10-வது சீட்டுக்கு பகுஜன் சமாஜின் ராம்ஜி கௌதம் மற்றும் சுயேச்சை வேட்பாளர் பிரகாஷ் பஜாஜ் ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவியது. பிரகாஷ் பஜாஜுக்கு சமாஜவாதி ஆதரவு தெரிவித்தது. பஜாஜின் வேட்பு மனு ரத்து செய்யப்பட்டதையடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்தது. இதன்மூலம், கட்சியிலிருந்து 10 வாக்குகள் இருந்தபோதிலும் பகுஜன் சமாஜ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.