“அ.தி.மு.க.வை போல் கீழ்த்தரமான அரசியல் செய்ய விரும்பவில்லை” – சு.முத்துச்சாமி

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்யும் வகையில் கோவையில் அ.தி.மு.க.வினர் சுவரொட்டிகளை பல்வேறு இடங்களில் நேற்று இரவு ஒட்டியிருந்தனர். இதனை அறிந்த தி.மு.க.வினர் அப்பகுதியில் திரண்டு போஸ்டர்களைக் கிழித்து அப்புறப்படுத்தினார்கள். இது போலவே ஈரோட்டிலும் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட, ஈரோடு தி.மு.க.வினர் அந்த போஸ்ட்டர்களைக் கிழித்ததோடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
அந்தப்பகுதியில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில், போஸ்ட்டர் ஒட்டப்பட்ட ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியில் அ.தி.மு.க.வினரை கண்டித்து தி.மு.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சு.முத்துசாமி தலைமை வகித்தார். இதில், அ.தி.மு.க.வினர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், செல்லப்பொன்னி, உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால், அந்தப் பகுதியில் பதட்டமான சூழலும் நிலவியது. இது சம்பந்தமாக மா.செ. சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, “தி.மு.க.வின் சட்டமன்ற தேர்தலின் முதல் பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் கடந்த 1ஆம் தேதி சிறப்பாக நடந்தது. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பேசினார். இந்தக் கூட்டத்தினை பல லட்சம் மக்கள் காணொளி வாயிலாக பார்த்தனர். தி.மு.க.வுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத அ.தி.மு.க.வினர் தலைவர் மு.க.ஸ்டாலிக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
நாங்கள் இரவே காவல் துறைக்கு புகார் அளித்து, அந்த போஸ்ட்டர்களை அப்புறப்படுத்தி விட்டோம். அ.தி.மு.க.வினருக்கு மட்டும் தான் போஸ்டர் ஒட்ட தெரியுமா? அவர்களைவிட அ.தி.மு.க.வை கண்டித்து தி.மு.க.வினர் போஸ்டர் ஒட்டுவோம். ஆனால் நாங்கள் அவர்களைப் போல் கீழ்த்தரமான அரசியல் செய்ய விரும்பவில்லை. அ.தி.மு.க.வினர் இது போன்ற சில்லறை தனமான அரசியலை கைவிட்டு விட்டு நேரடியாக, நியாயமான தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும். அரசியலில் நாகரீகமற்றவர்கள் அ.தி.மு.க.வினர். காவல் துறை அதிகாரிகள் இதுபோல போஸ்டர் இருந்தால் உடனே அப்புறப்படுத்த வேண்டும். அவர்கள் அப்புறப்படுத்தவில்லை என்றால் தி.மு.க.வினர் அப்புறப்படுத்துவார்கள். மக்களுக்காக போராட தி.மு.க.வினர் மேலும் வலுவுடன் இருங்கள். இன்னும் ஆறே மாதத்தில் மக்கள் உரிமைகளை காக்கும் நமது கழக ஆட்சி மலரும் தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார்” என்றார்.