“மனுஸ்ருதி என்பது புழக்கத்தில் இல்லாத புத்தகம். அதைப்பற்றி பேச வேண்டிய அவசியமில்லை” கமல்ஹாசன் பேட்டி!!

சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும் சட்டப்பேரவையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “நல்லவர்களுடன் கூட்டணி உண்டு. பல கட்சிகளில் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனம் நொந்து இருக்கிறார்கள். அவர்கள் இங்கே வரவேண்டும். கூட்டணி பற்றி இப்போது பேசும் நேரமல்ல. பழி போடும் அரசியலாக இல்லாமல், பழி வாங்கும் அரசியலாக இல்லாமல், வழிகாட்டும் அரசியலாக இருக்க வேண்டும் என்று நம்பி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
ரஜினியுடன் அரசியல் நிலைப்பாடு பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், ஒரு நண்பராக அவரது உடல்நிலை முக்கியம். வருவது குறித்து அவர்தான் முடிக்க வேண்டும்.
கள ஆய்வின் அடிப்படையிலே தமிழகத்தின் 3 ஆவது பெரிய கட்சியாக மக்கள் நீதி மய்யம் உருவெடுத்துள்ளது, 100 முதல் 160 தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறோம். மாற்றம் வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். குறுகிய கால கட்டத்தில் கட்சியில் ஒரு லட்சம் பேர் சேர்ந்துள்ளார்கள். அரசியலில் எங்கள் கொள்கை நேர்மை மட்டுமே.
சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். மனு தாக்கல் செய்யும்போது எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்று உங்களுக்குத் தெரியும். கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்பது எனது மிகப்பெரிய பொறுப்பு. மேலும், தேர்தலுக்கான அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்.
மனுஸ்ருதி என்பது புழக்கத்தில் இல்லாத புத்தகம். அதைப்பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. ‘வேல் யாத்திரை’க்குப் பதிலாக வேலை வாங்கிக்கொடுப்பதே எனது வேலை. இப்போது வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதன் மூலம் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. வரவேற்கிறேன்.
சகாயம் போன்ற நல்லவர்களை எப்போதும் மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்கும். எனக்கு மக்கள் முன்னிலையில் வெளிச்சத்தில் நிற்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரச்சாரம் செய்வேன். எனது கட்சியின் கொடியையும், சின்னத்தையும் மக்களிடம் எடுத்துச் செல்வேன்.” இவ்வாறு பதில் அளித்துள்ளார்.