சேலத்திலிருந்து சென்ற காய்கறி மினி லாரி.. சோதனையில் தக்காளிக்கு பதிலாக வெடிப்பெருட்கள்!!

சேலத்திலிருந்து கோவை வழியாக கேரளத்திற்கு அனுமதியின்றி வெடிப்பெருள்கள் கடத்திய இருவரை வாளையாறு காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 7,500 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர்.
கேரளம் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் பணிகள் நடைபற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு, வாளையாறு சோதனை சாவடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்திலிருந்து தக்காளி ஏற்றி வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது லாரியில் இருந்த தக்காளி பெட்டிகளை கீழே இறக்கி, உள்ளே இருந்த மற்ற பெட்டிகளை சோதனையிட்ட போது அதில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மினி லாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரபு (30), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ரவி (38) இருவரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக சேலத்தில் இருந்து கேரளம் மாநிலம் அலுவவிற்கு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து 35 பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த 7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 7,500 டெட்டனேட்டர்களையும் பறிமுதல் செய்த வாளையாறு காவலர்கள், இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.