ஐபில் 2020:டெல்லியை வீழ்த்தி மாஸாக இறுதி போட்டிக்கு தகுதியான மும்பை….

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிபையர் போட்டியில், டெல்லி அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறியது.
துபாயில் நடைபெற்ற ஐபிஎல் குவாலிபையர்- முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். டி காக் 25 பந்துகளில் 40 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 30 பந்ததில் 55 ரன்களும், ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 37 ரன்களும் குவித்தார்.

இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 200 ரன்கள் குவித்தது.
201 ரன்கள் என்ற வெற்றி இலக்கை கொண்டு களமிறங்கிய டெல்லி அணியின் பிரித்வி ஷாவையும், ரகானேவையும் ரன் எதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே டிரென் போல்ட் வெளியேற்றினார்.

இரண்டாவது ஓவரை வீசிய பும்ரா, ஷிகர்தவானையும் டக்அவுட்டில் வெளியேற்றி டெல்லிக்கு அதிர்ச்சி அளித்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 12 ரன்னிலும், ரிஷப் பண்ட் 3 ரன்னிலும் வெளியேறியதையடுத்து, மும்பை அணியின் வெற்றி உறுதியானது. இருப்பினும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 46 பந்துகளில் 65 ரன்களும், அக்சர் பட்டேல் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான தோல்வியை தழுவியது.

இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ராவிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், மும்பை அணி ஐபிஎல் இறுதிபோட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா, டெல்லி அணியின் ஆட்டம் நன்றாக இருந்ததாகவும், இருப்பினும் தங்கள் அணி வீரர்கள் சரியானமுறையில் திட்டமிட்டு விளையாடி வெற்றியை ஈட்டியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.