பட்டா கத்தியால் கேக் வெட்டி, பட்டென போலீசிடம் மாட்டிக் கொண்ட ‘நானும் ரவுடி தான்’ கும்பல்!!!

பிறந்த நாள் கேக்கை, பட்டா கத்தியால் வெட்டி கொண்டாடிய ரவுடி உட்பட மூவரை சென்னை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சிந்தாதிரிப்பேட்டை காக்ஸ் காலனியில் சில தினங்களுக்கு முன், ஒரு கும்பல் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையறிந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சிந்தாதிரிப்பேட்டை என்.என்.,காலனியைச் சேர்ந்த ரவுடி சஞ்சய் (21) என்பவர், 10ம் தேதி பட்டா கத்தியால் கேக் வெட்டி, நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடியது தெரிய வந்தது. நேற்று, ரவுடி சஞ்சய், அவரது நண்பர்களான, கணேஷ், பாலாஜி ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த ஆகாஷ் (19) என்பவரை தேடி வருகின்றனர்.
ரவுடி பினுவை தொடர்ந்து, அவரை போலவே ரவுடிகள் பிறந்த நாள் கேக்கை பட்டா கத்தியால் வெட்டுவதும், அதை சமூக வலைதளங்களில் பகிர்வதும் வழக்கமாகியுள்ளது.