இந்தியாகுற்றம்செய்திகள்

கர்நாடகாவில் ரூ.250 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், தங்கம்,வெள்ளி பறிமுதல்!! அரசு பெண் அதிகாரி மீது புகார்..

கர்நாடக அரசு பெண் அதிகாரியின் தோழி வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.250 கோடி சொத்து ஆவணங்களும், 3½ கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி பொருட்களும் சிக்கி உள்ளன.

பெங்களூருவில் கர்நாடக அரசின் உயிரி தொழில்நுட்ப துறையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுதா. இவர் இதற்கு முன்பு பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் நிலம் கையகப்படுத்தும் அதிகாரியாக பணியாற்றினார்.

சுதா மீதான ஊழல் குறித்த புகாரின்பேரில் பெங்களூருவில் உள்ள அவரது வீடு உள்பட 6 இடங்களில் சோதனை நடந்தது. இதில் பல லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை ஊழல் தடுப்பு படையினர் எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் எந்த பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றாலும் அதற்கு சுதா லஞ்சம் பெற்று வந்ததாகவும், சுதாவின் தோழியான ரேணுகா என்பவர் லஞ்ச பணத்தை வாங்கி கொடுக்கும் ஏஜெண்டு போல செயல்பட்டு வந்ததாகவும் தகவல் கிடைத்தது.

அதன்படி பேடராயனபுராவில் உள்ள ரேணுகா வீட்டில் நேற்று ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 3½ கிலோ தங்கநகைகள், 7 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.35 லட்சம், 40 வங்கிக்கணக்கு புத்தகங்கள், 100 காசோலைகள், ரூ.250 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின. தங்கநகைகள், வெள்ளி பொருட்கள், சொத்து ஆவணங்கள், பணம் ஆகியவை சுதாவுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது.

சுதாவின் தோழி ரேணுகாவின் கணவர் ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவார். அவரது மகன் மின்வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரேணுகா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், சுதாவின் சொத்துகளுக்கு அவர் தான் பினாமி என்றும் கூறப்படுகிறது.

Related Articles

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x