தீபாவளி குறித்து கேட்டதற்கு பக்ரீத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட உத்திரபிரதேச பாஜக எம்.பி.!!!

பாஜகவில் சர்ச்சைக்கு பெயர்போன உத்தரபிரதேச பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ், தற்போது பக்ரீத் மற்றும் தீபாவளி குறித்து பேசியிருப்பது பெரும் விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது.
கொரோனா மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக ராஜஸ்தான், ஒடிசா, சிக்கிம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், பாஜக மூத்த தலைவருமான சாக்ஷி மகாராஜ் தனது பேஸ்புக் பதிவில், “ஆடு பலியிடப்படாமல் பக்ரீத் கொண்டாடப்படும் ஆண்டில் பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாடப்படும். அதனால் யாரும் காற்று மாசு குறித்து பேசக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெட்டிசன்கள் சாக்ஷி மகாராஜின் கருத்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.