தொழிற்சங்கங்களின் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தி.மு.க முழு ஆதரவு!! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தி.மு.க முழு ஆதரவளிப்பதாக அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மத்திய பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில் வருகின்ற 26.11.2020 அன்று நடத்தப்பட இருக்கும் மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
“பணியிடப் பாதுகாப்பு நல்வாழ்வு மற்றும் பணியிடச் சூழல்கள் சட்டத் தொகுப்பு”, “சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு”, “இந்தியத் தொழில் உறவுச்சட்டத் தொகுப்பு”, “ஊதியச் சட்டத் தொகுப்புச் சட்டம்” என நான்கு தொகுப்புச் சட்டங்களும் தொழிலாளர்களின் மதிப்புமிக்க உரிமைகளுக்குக் குந்தகம் விளைவித்துள்ளது. இது தவிர விவசாயிகளைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு, புதிய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் விரோத, மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசின் சட்டங்களை – நடவடிக்கைகளைக் கண்டித்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் பொது வேலை நிறுத்தம் மிக முக்கியமான தருணத்தில் நடைபெறுகிறது.
ஆகவே, இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் – இதை ஏதோ தொழிற்சங்கங்கள் மட்டும் எதிர்க்க வேண்டிய சட்டங்கள் என்று கருதிவிடாமல் – தொழிலாளர் நலனில் ஆர்வமும் அக்கறையும் உள்ள அனைத்துக் கட்சிகளும் – அமைப்புகளும் ஒரே அணியில் நின்று ஒரு முகமாகப் போராடிட முன்வர வேண்டும் என்றும்; 26-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் வேலை நிறுத்தத்தின் போர்ப் பிரகடனப் பேரெழுச்சி டெல்லி செங்கோட்டையில் எதிரொலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். வீழ்வது மத்திய பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்காக இருக்கட்டும்; வெல்வது தொழிலாளர்களின் ஒற்றுமையாக இருக்கட்டும்!” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.