“வீட்டை விட்டு வெளியே வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை கல்லறைக்கு அனுப்புவோம்” பகிரங்கமாக மிரட்டும் பாஜக தலைவர்!!

மம்தா கட்சியினரின் கை, கால், தலை, விலா எலும்புகள் உடைக்கப்படும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்கத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. இதற்காக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இப்போதிருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளன.
மேற்குவங்கத்தை கைப்பற்றும் முனைப்பில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், பொதுக்கூட்டம் நடத்தி, முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சி குறித்து விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஹலிடா பகுதியில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் திலீப் கோஷ் பேசியதாவது: “மம்தா கட்சியினர் 6 மாதங்களுக்குள் தங்களை திருத்திகொள்ள வேண்டும். இல்லையெனில், மம்தா கட்சியினரின் கை, கால், தலை, விலா எலும்புகள் உடைக்கப்படும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் ஒழுங்கீன செயல் அதிகரித்தால் வெளியே வரும் அவர்கள் வீட்டிற்கு திரும்ப முடியாது. மருத்துவமனைக்கு அனுப்பி வைப்போம். அப்படியிருந்தும் ஒழுங்கீனம் அதிகரித்தால், கல்லறைக்குத்தான் அனுப்பி வைப்போம்.” இவ்வாறு அவர் பேசினார்.
திலீப் கோஷின் இந்த பேச்சு, மேற்குவங்க அரசியலில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.