“அமெரிக்காவில் டிரம்புக்கு நடந்தது தான் பாஜகவுக்கும் நடக்கப் போகிறது” மெஹபூபா முப்தி எச்சரிக்கை!!
![](https://thambattam.com/storage/2020/11/Mehbooba.jpg)
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்கடிக்கப்பட்டதைப் போல், இந்தியாவில் பாஜகவும் தோற்கடிக்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் இன்று (நவ.,09) செய்தியாளர்களிடம் மெஹபூபா முப்தி கூறுகையில், “அமெரிக்காவில் என்ன நடந்தது என்பதை பாருங்கள். டொனால்ட் டிரம்ப் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அதேபோன்று பாஜகவும் தோற்கடிக்கப்படும். பீஹார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் – இடதுசாரிகளுடன் இணைந்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, மெகா கூட்டணி அமைத்த வியூகம் பாராட்டுக்குரியது. தேஜஸ்வி சரியான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் வளங்கள் இப்போது விற்பனை செய்யப்படும் என அறிவித்திருக்கிறார்கள். பண்டிட்டுகளுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? ஜம்மு-காஷ்மீரை பாஜக விற்பனை செய்கிறது. ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால்தான் அவர்கள் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள். கடந்த காலங்களைவிட பயங்கரவாத இயக்கங்களில் ஆட்சேர்ப்பு இம்முறை அதிகரித்துள்ளது.
எல்லையில் யுத்த நிறுத்த ஒப்பந்தங்கள் தொடர்ந்து மீறப்படுகின்றன. இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடிக்காக ஜம்மு-காஷ்மீரின் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான அமைதிக்கான பாலமாக ஜம்மு-காஷ்மீர் இருக்க வேண்டும். அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு என்பது இந்துக்களோடும் முஸ்லிம்களோடும் இணைந்தது அல்ல. ஜம்மு காஷ்மீரின் அடையாளத்தை பாதுகாக்கக் கூடியதாக 370வது பிரிவு இருந்தது.
இப்போது இந்த மண்ணின் மக்கள் எதிர்காலம் குறித்து கவலைப்படுகின்றனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மட்டும் அவர்கள் ரத்து செய்யவில்லை. அம்பேத்கரின் அரசியல் சாசனத்தையே தூக்கிவீசி விட்டனர்.” இவ்வாறு அவர் கூறினார்.