இளம்பெண்ணின் ஆபாச படத்தை கணவருக்கு அனுப்பிய கும்பல்!! வாழ்க்கை பறிபோன அவலம்..

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கண்டபட்டியை சேர்ந்தவர் சாலமோன்(வயது 25), தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஜான்சன்(24), மனோசேட்(27). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
மது குடிக்கும் பழக்கம் கொண்ட இவர்கள் வேலைக்கு செல்லாமல் இளம்பெண்களை குறிவைத்து அவர்களிடம் பேசி பழகி, பின்னர் அவர்களை தங்களது வலையில் சிக்க வைப்பார்கள்.
பின்னர் அந்த இளம்பெண்களுடன் ஒன்றாக இருக்குமாறு புகைப்படம் எடுத்து அதன் மூலம் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பின்னர் அந்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.
இதேபோல் முக்கூடல் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் சாலமோன் பேசி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. அப்போது அந்த இளம்பெண் அடிக்கடி சாலமோனிடம் வீடியோ காலில் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை காட்டி சாலமோன் அந்த பெண்ணை வீடியோ காலில் ஆபாசமாக படம் எடுத்துள்ளார். அதை தனது போனில் பதிவு செய்த சாலமோன், இளம்பெண்ணிடம் அதை காட்டி அடிக்கடி பணம் பறித்து வந்துள்ளார்.
இளம்பெண்ணும் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி சாலமோன் பணம் கேட்கும் போதெல்லாம் கொடுத்து வந்துள்ளார். ஆனால் சாலமோன் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதால் வேறு வழியில்லாமல் தனது பெற்றோரிடம் இளம்பெண் கூறி உள்ளார்.
இதையடுத்து அந்த இளம்பெண்ணை வேறு ஒருவருடன் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் ஆனது. இதனால் ஆத்திரம் அடைந்த சாலமோன் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு சென்றுள்ளனர்.
அந்த பெண்ணிடம் உடனடியாக ரூ.1 லட்சம் தர வேண்டும். இல்லையெனில் தன்னிடம் இருக்கும் ஆபாச படத்தை அவரது கணவர் மற்றும் பெற்றோருக்கு அனுப்பி விடுவதாக சாலமோன் மிரட்டல் விடுத்துள்ளார்.
அதற்கு இளம்பெண் பணம் இல்லை என்று கூறியதால், அவர் கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸ், மோதிரத்தை வாங்கி கொண்டு சாலமோன், அவரது நண்பர்கள் ஜான்சன், மனோசேட் ஆகியோர் சென்று விட்டனர்.
இதுகுறித்து இளம்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர்கள் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த புகாரை விசாரிக்க போலீசார் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ஆத்திரம் அடைந்த சாலமோன், இளம்பெண்ணுடன் இருந்த ஆபாச படத்தை அவரது கணவர் மற்றும் மாமனாரின் செல்போனுக்கு அனுப்பி உள்ளார். இதனால் அந்த இளம்பெண்ணை அவரது கணவர் அவரது பெற்றோர் வீட்டிலேயே இருக்குமாறு கூறி உள்ளார்.
இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் சேரன்மகாதேவி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்பிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் முக்கூடல் போலீசில் புகார் செய்யப்பட்டது.
நடந்த சம்பவங்களை கேட்டறிந்த போலீசார் சாலமோன், அவரது நண்பர்கள் மனோசேட், ஜான்சன் ஆகியோர் மீது கொலை மிரட்டல், பாலியல் ரீதியில் துன்புறுத்துதல், பாலியல் மிரட்டல் விடுத்து பெண்ணிடம் நகை பறித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் ஜான்சன் வேறொரு வழக்கில் ஜெயிலில் உள்ளார். மனோசேட், சாலமோன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்த காசி மற்றும் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல் சாலமோன் உள்ளிட்ட 3 பேரும் இதுபோல் பல பெண்களிடம் பணம் பறித்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.