மதுபானங்களை வாங்கி, அதிக விலைக்கு விற்பனை!! 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது..

ஊத்துக்கோட்டை அருகே பென்னலூர்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட நம்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி அதை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பென்னலூர்பேட்டை எஸ்.ஐ. வெங்கடேசன் தலைமையில் எஸ்.ஐ.சுரேந்தர் மற்றும் போலீசார் நேற்று காலை நம்பாக்கம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் மடக்கினர்.
பின்னர், அந்த ஆட்டோவை சோதனை செய்ததில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானங்கள் பெட்டிகளில் அடுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், போலீசார் அவர்களை விசாரித்ததில் அவர்கள் திருவள்ளூரில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து, மதுபானங்களை வாங்கி வந்து அதை அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. பின்னர், டாஸ்மாக் மதுபானங்களை ஆட்டோவில் கடத்தி வந்ததாக நம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகேந்திரன் (55) மற்றும் பத்மா (50), வைலட் (60) என 2 பெண்கள் உட்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.