திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் தலைவர் ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் தலைவர் ஸ்ரீதர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை நங்கநல்லூரில், ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்கம் சார்பில் அண்மையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் தலைவர் ஸ்ரீதர் பங்கேற்று பேசினார்.
அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், அவதூறாகவும் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோரையும் இழிவுபடுத்தி இருந்தார்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஸ்ரீதர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் பிரபு பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில், பொள்ளாச்சி போலீசார் அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் தலைவர் ஸ்ரீதர் மீது கொலை மிரட்டல், அவமதித்தல், ஆபாசமாகப் பேசுதல் மற்றும் கலகம் செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து ஸ்ரீதர் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.