லவ் ஜிஹாத்துக்கு எதிராக மசோதா தாக்கல் செய்ய உள்ள மத்திய பிரதேச அரசு!!

“லவ் ஜிஹாத்துக்கு எதிரான சட்டம் விரைவில் அமலுக்கு வரும்” என மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசத்தில் அடுத்து நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் லவ் ஜிஹாத்துக்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கும் வகையில் இந்த சட்டம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில் “இந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது. குற்றம் செய்தவர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்தவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். விருப்பத்துடன் மதம் மாற்றம் செய்து திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம்” என்றார்.
கர்நாடகா மற்றும் ஹரியானா மாநில அரசுகளும் இதுபோன்ற சட்டங்களை அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய பிரதேசத்திலும் இதற்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, லவ் ஜிஹாத் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்பவர்களுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர முடிவெடுத்துள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.