அடி மேல் அடி.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் தீபக் சாஹர், ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு சி.எஸ்.கே வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஒலிம்பிக், உலக கோப்பை கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பிரபல ஐபிஎல் போட்டிகள் தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்காக அதில் பங்கேற்கும் அணிகள் அமீரகம் கிளம்பிச் சென்றுள்ளன.
அந்த வகையில், தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதியன்று துபாய்க்கு கிளம்பிச் சென்றனர். அங்கு 6 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு பிறகு நேற்று பயிற்சியை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதிர்ச்சி தரும் விஷயமாக, சென்னை அணியின் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. மேலும், பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கும் கொரோனா உறுதியானது. இதனால் தனிமைப்படுத்தும் காலத்தை மேலும் சில நாட்களுக்கு சென்னை அணி நீட்டித்துள்ளது.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வலதுகை பேட்ஸ்மேனான ருத்ராஜ் கெயிக்வாட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது ஆண்டாக சென்னை அணியால் ஏலம் எடுக்கபட்டுள்ள அவர், ஐ.பி.எல்-ல் இதுவரை ஒரு போட்டியில் கூட ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னாவும் நடப்பு ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகி உள்ளதால் சி.எஸ்.கே ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
செப்டம்பர் 19 முதல் ஐ.பி.எல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், 2 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது சென்னை அணிக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.