
குழந்தை குனிந்த தலை நிமிராமல் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கும் இந்த அனுபவம் நிச்சயம் இருக்கும்!
முதன்முதலில் செல்போன் வீட்டுக்கு வந்த நேரம். அதைத் தொட்டுப் பார்ப்பதற்குக்கூட அப்பா அனுமதிக்க மாட்டார். அவர் இல்லாத நேரம் எடுத்து அதில் இருக்கும் கேம்ஸை விளையாடிவிட்டு அப்பாவுக்குத் தெரியாமல் வைப்பது வழக்கம்.
இளைஞர்களும் மாணவர்களும் செல்போன் செயலிகளுக்கும் செல்போனில் இருக்கும் விளையாட்டுகள், சமூக வலைதளங்களுக்கும் அடிமையாகிவிட்டார்கள் என்று கூறிக்கொண்டு இருந்தோம். ஆனால், தவழும் குழந்தைகள் கையிலும் செல்போன் தவழத் தொடங்கிவிட்டது. விலை மலிவாக 4g வேகத்தில் இன்டர்நெட்டுடன் வந்துசேர, குழந்தைகளிடம் செல்போன் எளிதில் ஒட்டிக்கொண்டது.
செல்போன் வருவதற்கு முன்புவரை நிலாவைக் காட்டி சோறு ஊட்டினார்கள். `பூச்சாண்டி வருவான்’, `பாட்டி வடை சுடுகிற கதை’ எல்லாம் சொல்லி ஊட்டிவிடுவார்கள். இப்போது ரொம்ப ஈஸி. யூடியூப் காட்டி சோறு ஊட்டிவிடுகிறார்கள். இதற்காகவே நிறைய சேனல்கள் உள்ளன. infobell, chu chu tv – இப்படி எதையாவது ஒன்றை வைத்து குழந்தைகள் கையில் கொடுத்து விட்டால்போதும். அதிலும் `கண்மணி பாப்பா’ குழந்தைகளின் கனவுக் கன்னியாக இருக்கிறது. `கடகட வண்டி வருகுது’ பாடலுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
சமீபத்தில் அதிக முறை பார்க்கப்பட்ட பாடலின் உண்மையான பாராட்டுக்கு உரியவர்கள் குழந்தைகள்தாம். ஆம்… `ரவுடி பேபி’ பாடலைப் பார்க்காத குழந்தைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மழலைப் பட்டாளம் அதிரடியாகப் பார்த்துவிட்டது. அந்தப் பாடல் வைத்தால் ஓர் இட்லி அதிகமாக இறங்கும் என்பது பெற்றோர் நம்பிக்கை.
சாப்பிடும்போது மட்டும் பார்த்து நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை. பொது இடங்கள், மருத்துவமனை, வங்கி என எல்லா இடங்களிலும் குழந்தைகள் குனிந்த தலை நிமிராமல் இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது.
முதலில், குழந்தைகள் மொபைல் போனில் லாக் எடுப்பதையும் புகைப்படம் எடுப்பதையும் ரசிக்கும் பெற்றோர்கள், அதை பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். நாளடைவில் அதுவே அவர்களுக்கு விபரீதமாக மாறிவிடுகிறது.
அதிக நேரம் போன் பார்த்துக்கொண்டே இருப்பதால், சிறுவயதிலேயே கண் கோளாறுகள் வருகின்றன. பெற்றோரை விஞ்சும் வகையில் இரவும் அதிக நேரம் மொபைல் பார்ப்பதால் தூக்கமின்மைக்கு ஆளாகிறார்கள். அது மட்டுமல்ல… மனரீதியான பாதிப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது. சட்டென கோபப்படுவது, மூர்க்கமாக அடிப்பது போன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடத் தொடங்குகிறார்கள். இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் பல பெற்றோர்கள், அதற்கும் மொபைல் போனிலேயே வழி தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
good story