“அமெரிக்க வரலாற்றில் கொஞ்சமும் பொறுப்பற்ற அதிபர் டொனால்ட் டிரம்ப்” ஜோபைடன் குற்றச்சாட்டு!!
![](https://thambattam.com/storage/2020/11/joe-biden-donald-trump-split-file-780x470.jpg)
“தேர்தல் முடிவுகளை முறியடிக்க முயற்சிக்கும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க வரலாற்றில் கொஞ்சமும் பொறுப்பற்ற அதிபர்” என ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வியாழக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் மிச்சிகன் மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகும், முடிவுகளை மாற்றும் முயற்சியில் டிரம்ப் ஈடுபடுவது பற்றி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பைடன், “டிரம்ப்பின் தற்போதைய செயல்களே, அவர் அமெரிக்க வரலாற்றில் கொஞ்சமும் பொறுப்பற்ற அதிபராக இருப்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கும். தேர்தல் முடிவுகளை முறியடிக்க முயற்சிக்கும் அவரது செயல்பாடுகள் விதிமுறைக்கு உட்பட்டது அல்ல. இது சட்டபூர்வமானதுதானா என்ற கேள்விகள் எழுகின்றன.
ஆனால், இறுதியில் யார் தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள் என்பது சுவாரசியமாக இருக்கும். மிச்சிகனில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஜனவரி 20 ஆம் தேதி நாங்கள் பதவியேற்கப் போகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, டிரம்ப்பின் இந்த நடவடிக்கை மூர்க்கத்தனமாக இருக்கிறது. அவர் என்ன நினைக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்வதே கடினம்” என்று பதிலளித்தார்.
மேலும், மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பைடன், டிரம்ப்பின் நம்பகத் தன்மையற்ற பொறுப்பற்ற தன்மைக்கு அமெரிக்க மக்கள் சாட்சியாக உள்ளனர் என்று தெரிவித்தார்.