‘அரசியல்வாதிகளை காப்பாற்றத்தான் ரவுடி என்கவுன்டர்?’ கேள்வி எழுப்பும் போலீஸ் உறவினர்
“விகாஸ் துபேவை வளர்த்து பாதுகாத்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ரவுடி விகாஸ் துபேவால் கொல்லப்பட்ட மூத்த போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

டி.எஸ்.பி. தேவேந்திர மிஸ்ரா
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே, தங்களைப் பிடிக்க வந்த 8 போலீசாரை, ரவுடி விகாஸ் துபே கும்பல், இயந்திர துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட்டுத்தள்ளியது. இதில் 8 பேரும் உயிரிழந்தனர். இந்தியாவையே அதிரச் செய்த இந்த படுகொலையில், விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 5 பேரையும், பின்னர் விகாஸ் துபேயையும் என்கவுன்டர் மூலம் போலீசார் சுட்டுக்கொலை செய்தனர்.
இந்நிலையில், இந்த அவசர என்கவுட்டரால், விகாஸ் துபேக்கு பின்னணியில் செயல்பட்ட அரசியல்வாதிகள் தப்பித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக, விகாஸ் துபேவால் கொல்லப்பட்ட டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ராவின் தம்பி கமல காந்த் மிஸ்ரா கூறியதாவது:
“ என் சகோதரரை கொன்ற விகாஸ் துபே மற்றும் அவனது ஆட்கள் உயிருடன் இல்லை என்பதில் நாங்கள் ஆறுதலடைய முடியும். ஆனால், நம் சமூகத்தில் உள்ள நோய் இன்னும் அப்படியே இருக்கிறதே.. அதற்கு என்ன செய்வது?
விகாஸுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள், அவன் வளர உதவியவர்கள், அவனுக்கு பாதுகாப்பு அளித்தவர்கள், என அவனுக்கு உடந்தையாக இருந்தவர்கள் இன்னும் இந்த சமூகத்தில் அப்படியே எஞ்சி இருக்கின்றனர். 60 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ள ஒருவனால் எப்படி மீண்டும் மீண்டும் வெளியே வர முடிந்தது? காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளுடனான அவனது தொடர்புகளே அதற்கு காரணம். இப்போது இறந்தது ஒரு ஒரு விகாஸ் துபே தான். ஆனால் இன்னும் 10 பேர் அவனுடைய இடத்துக்கு வருவார்கள்
தேர்தல்களில் விகாஸ் துபேவின் உதவியைப் பெற்று ஜெயித்த அரசியல்வாதிகளை என்ன சொல்லப்போகிறீர்கள்? அவர்களால் தான், விகாஸ் துபே போன்றோரால் செழித்து வளர முடிகிறது. நாம் இந்த பிரச்னையின் வேரைத்தான் தாக்கி அழிக்க வேண்டும். விகாஸ் துபே உயிரோடு இருந்திருந்தால், இன்னும் பல பெரிய குற்றவாளிகள் குறித்த உண்மைகள் வெளிவந்திருக்கும்.
என்னைப்பொறுத்தவரை, விகாஸ் சாவு என்பது, இந்த கதையின் முடிவல்ல; இது ஒரு ஆரம்பமே. ” என்று கமல காந்த் மிஸ்ரா தெரிவித்தார்.