“நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடி நிவாரணமாக 5000 ரூபாய் வழங்க வேண்டும்!” மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!
“நிவர் புயலால் பாதிப்புக்குள்ளான அனைத்து தரப்பினருக்கும் உடனடி நிவாரணமாக 5000 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் நிரம்பியுள்ள அடையாறு மற்றும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்ஆறுதல் கூறினார். மேலும், நிவர் புயல் மற்றும் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள, சென்னை – சைதாப்பேட்டை பகுதி பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதன்பின் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்கும்போது, கடந்த கால புயல் மற்றும் டிசம்பர் 2015 பெருவெள்ளத்திலிருந்து எவ்விதப் பாடத்தையும் அதிமுக அரசு கற்றுக் கொள்ளவில்லை என்று பொதுமக்கள் ஒரே குரலில் சொன்னதையும் கேட்க முடிந்தது.
இந்நிலையில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்து – இழப்புக்குள்ளாகியுள்ள அடித்தட்டு மக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடி நிவாரணமாக 5000 ரூபாய் ரொக்கமாக வழங்கிட வேண்டும். வீடு இழந்தவர்களுக்கு புது வீடு கட்டித்தருவதோடு – வேளாண் விளைபொருட்கள் இழப்பீட்டிற்கு உள்ளானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.