“வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்!” கமல்ஹாசன் கோரிக்கை!!
மக்கள் நீதி மையம் சார்பாக தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகிறோம். ஆனால் இதற்கு அரசுதான் முழு முயற்சிகளை மேற்கொண்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.”
மரக்காணம் இடையே நள்ளிரவில் கரையைக் கடந்த அதி தீவிர நிவர் புயலால், பலத்த சூறைக்காற்று வீசியதோடு, கனமழையும் பெய்தது. இந்நிலையில், அதிதீவிர புயலாக வலுப்பெற்ற நிவர் புயலின் வெளிச் சுவர் புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் புதுச்சேரிக்கும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திற்கும் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால், புதுச்சேரி, கடலூர், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.
இதனிடையே புயல் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து வரும் நிலையில் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஹாசன் சைதாப்பேட்டையில் உள்ள முகாமை பார்வையிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “நிவர் புயல் காரணமாக பல இடங்களில் குடிசை வீடுகளில் உள்ளோர் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பெரும்பாலான மக்கள் தங்கள் இடம் இல்லாமல் அந்த பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்து அவர்கள் தங்கி இருக்கிறார்கள். அந்த இடங்களில் தற்போது இருக்க முடியாத சூழ்நிலையில் குடிசைகள் அனைத்தும் தண்ணீரில் அடித்து செல்லபட்டிருப்பதால் தங்களுடைய மொத்த வாழ்வாதாரத்தை தொலைத்து நிர்கதியாக நிற்கிறார்கள்.
மக்கள் நீதி மையம் சார்பாக தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகிறோம். ஆனால் இதற்கு அரசுதான் முழு முயற்சிகளை மேற்கொண்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.