அமெரிக்காவிலும் பிரபலமடைந்த சித்தி…! அட இவர்தான் காரணமா?

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், தனது பிரச்சார உரையின் போது பயன்படுத்திய ‘சித்தி’ என்ற தமிழ் வார்த்தை தற்போது அமெரிக்காவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கலிபோர்னியாவின் செனட்டர் கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர் தனது சென்னை பயண அனுபவம் மற்றும் குடும்பத்தினர் பற்றிய நினைவுகளை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் பிரச்சாரத்தின் போது, தமிழ் வார்த்தையை பயன்படுத்தியது இணையத்தில் வைரலாக ஆரம்பித்துள்ளது. தனது வளர்ச்சியில் குடும்பத்தினரின் பங்கு மற்றும் ஆதரவு குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார். தனது தாய் ஷ்யாமளா கோபாலன் குறித்து அவர் கூறுகையில், ‘அவர் எங்களை மிக தைரியமான பெண்களாக வளர்த்துள்ளார். நானும், எனது சகோதரியும் கருப்பின பெண்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். இந்திய பாரம்பரியத்தை அறிந்து பெருமை கொள்ளுமாறு எங்களை வளர்த்தார். குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்க அவர் எனக்கு கற்றுக் கொடுத்தார். அதன்படி எனது மாமா, அத்தைகள், சித்திகள்தான் எனது குடும்பம்’ என்றார்.
தனது உறவினர்களை குறிப்பிடும் போது, ‘சித்தி’ (chithis) என்ற வார்த்தையை மட்டும் தமிழில் பயன்படுத்தினார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சித்தி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று அமெரிக்கர்கள் பலரும் கூகுளில் தேட ஆரம்பித்துள்ளனர்.