“பாஜகவின் சிபிஐ ரெய்டுகளால் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி அரசை மிரட்ட முடியாது” உத்தவ் தாக்கரே விமர்சனம்!!

பாஜக அரசியல் பழிவாங்கலுடன் செயல்படுவதாகவும், சிபிஐ ரெய்டுகளால் கூட்டணி அரசை மிரட்ட முடியாது எனவும் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மஹா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்துச் சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே பேட்டி அளித்தார். நிர்வாக இயக்குநரும் சிவசேனா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் பேட்டி எடுத்தார்.

இந்தப் பேட்டியில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறும்போது, ”இந்த அரசு மக்களின் ஆசிர்வாதங்களைப் பெற்றுள்ளது. இதை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ரெய்டுகளால் மிரட்டிப் பார்க்க முடியாது. அரசியலில் பழிவாங்குவதற்கு மட்டும் முடிவே இல்லை. எனக்கு இந்தப் பாதையில் உடன்பாடு இல்லை. இதுபோன்ற நியாயமற்ற அரசியலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

எங்களின் அரசு அடுத்த 4 ஆண்டுகளுக்கு மாநிலத்தை ஆளும். அதன்பிறகு மக்கள் முடிவு செய்து கொள்வார்கள். சிலர் (பாஜக) சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணையாது என்றும் அவர்கள் பின்னால்தான் சிவசேனா வந்தாக வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் அது நடைபெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சிவசேனா எம்எல்ஏ. பிரதாப் சர்நாயக் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் நவ.24-ம் தேதி அன்று சோதனை நடத்தினர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x