லட்சக்கணக்கான விவசாயிகளை டெல்லியில் காக்க வைத்து விட்டு, ஐதராபாத் பிரசாரத்துக்கு பறந்த அமித்ஷா!! கெஜ்ரிவால் விமர்சனம்!!
போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நேற்று 4-வது நாளாகத் தொடர்ந்தது. இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ், “டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் பேச்சுவார்த்தைக்காக காத்துக் கொண்டிருக்கும்போது, உள்துறை மந்திரி அமித்ஷா ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்காக பிரசாரத்துக்கு சென்றிருப்பது மிகவும் பொறுப்பற்ற செயல்” என்றார்.
ஒருபுறம், விவசாயிகளின் போராட்டத்தால் கொரோனா தொற்று பரவக்கூடும் என்று கூறும் அமித்ஷா, மறுபுறம் ஐதராபாத்தில் எந்த சமூக இடைவெளியும் இன்றி மாபெரும் தேர்தல் ஊர்வலத்தை நடத்துகிறார். விவசாயிகளை மறந்துவிட்டு, ஐதராபாத்தில் தண்ணீர் தேங்குவது, சாலைப் பள்ளங்கள் போன்றவற்றை அமித்ஷா பேசிக்கொண்டிருக்கிறார் என்றார் சவுரப் பரத்வாஜ்.