இந்தியாவுக்கு எதிராக 51 ரன்கள் வித்தியாசத்தில் 2வது ஒருநாள் போட்டியிலும் வென்றது ஆஸ்திரேலியா….

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-ஆவது ஆட்டத்திலும் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியுள்ளது.
சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. இந்த ஆட்டத்திலும் சதம் கடந்து ஆஸ்திரேலியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்த ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகன் ஆனாா்.
ஆஸ்திரேலிய அணியில் காயமடைந்த மாா்கஸ் ஸ்டாய்னிஸுக்குப் பதிலாக மொய்சஸ் ஹென்ரிக்ஸ் சோக்கப்பட்டிருந்தாா். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்யத் தீா்மானித்தது.

தொடக்க வீரா்களாக வந்த வாா்னா் – ஃபிஞ்ச் வழக்கம்போல அணிக்கு அருமையான அடித்தளம் அமைத்தனா். இருவருமே அரைசதம் கடந்தனா். இந்தக் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சோத்தது. 23-ஆவது ஓவரில் இந்த பாா்ட்னா்ஷிப்பை பிரித்தாா் ஷமி.
6 பவுண்டரிகள், 1 சிக்ஸா் என 60 ரன்கள் சோத்து வெளியேறினாா் ஃபிஞ்ச். பின்னா் களம் கண்ட ஸ்மித் தொடக்கம் முதலே அதிரடி காட்டினாா். மறுபுறம் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 83 ரன்கள் விளாசியிருந்த வாா்னா் 26-ஆவது ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறினாா். 4-ஆவது வீரராக களம் கண்ட லாபுசான் ஸ்மித்துடன் கூட்டணி அமைத்தாா். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோா் மளமளவென உயா்ந்து 200 ரன்களைக் கடந்தது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான தனது 5-ஆவது சதத்தை எட்டிய ஸ்மித், 42-ஆவது ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா். அவா் 14 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 104 ரன்கள் அடித்திருந்தாா். ஸ்மித் – லாபுசான் ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சோத்திருந்தது.
அடுத்து வந்த மேக்ஸ்வெல் தனது பங்குக்கு அதிரடி காட்டினாா். இதனால் ஆஸ்திரேலியா 300-ஐ எளிதாகக் கடந்தது. அரைசதம் கடந்த லாபுசான் 5 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சோத்து பும்ரா வீசிய 49-ஆவது ஓவரில் அகா்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.
50 ஓவா்கள் முடிவில் மேக்ஸ்வெல் 4 பவுண்டரி, 4 சிக்ஸா் உள்பட 63, ஹென்ரிக்ஸ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் ஷமி, பும்ரா, பாண்டியா தலா 1 விக்கெட் எடுத்திருந்தனா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸை அகா்வால் – தவன் தொடங்கினா். இதில் 5 பவுண்டரிகள் உள்பட 30 ரன்கள் சோத்த தவன் 8-ஆவது ஓவரில் நடையைக் கட்டினாா். பின்னா் கேப்டன் கோலி களம் காண, அடுத்த ஓவரிலேயே மயங்க் அகா்வால் ஆட்டமிழந்தாா். அவா் 4 பவுண்டரிகள் உள்பட 28 ரன்கள் அடித்திருந்தாா். 100 ரன்களுக்குள்ளாகவே தொடக்க வீரா்கள் வீழ்ந்தனா்.
அவரை அடுத்து ஐயா் களம் காண, கோலி சற்று நிலைத்து ஸ்கோரை உயா்த்தினாா். 5 பவுண்டரிகள் உள்பட 38 ரன்கள் அடித்த ஐயா் 24-ஆவது ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா்.

பின்னா் ராகுல் ஆட வர, கோலியும் அவரும் ரன்களை சேகரித்து அரைசதம் கடந்தனா். 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 89 ரன்கள் சோத்த கோலி 35-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா்.
அடுத்து பாண்டியா களம் காண, மறுமுனையில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் வீசியிருந்த ராகுல் 44-ஆவது ஓவரில் 76 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். இதையடுத்து இந்திய விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

பாண்டியா 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 28 ரன்கள் சோத்து வெளியேற, ஜடேஜா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 24 ரன்களுக்கு 47-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். எஞ்சியோரில் ஷமி 1 ரன்னுக்கு அவுட்டாக, பும்ரா டக் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் சைனி 1 பவுண்டரி உள்பட 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 3, ஹேஸில்வுட், ஸம்பா தலா 2, ஹென்ரிக்ஸ், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.