W.H.Oக்கு நிதி வழங்கத் தடை: டிரம்ப் அதிரடி

உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா சார்பில் வழங்கப்படும் வருடாந்திர நிதியான 3000 கோடி ரூபாயை , அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் தொடங்கியபோதே, அதனை கட்டுப்படுத்தத் தவறியதாக ஐக்கிய நாடுகள் சபையின் மீது ஏற்கனவே குற்றச்சாட்டை முன்வைத்தார் டிரம்ப். குறிப்பாக, வைரஸ் பரவிய இடான வூகானின் இறைச்சிக் கடையை மீண்டும் செயல்பட அனுமதித்தது போன்ற பல்வேறு விஷயங்களில், WHO என்கிற உலக சுகாதார மையம், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், இதே நிலை நீடித்தால், உலக சுகாதார மையத்துக்கு அளிக்கப்பட்டு வரும் நிதி நிறுத்தப்படும் என்று அவர் எச்சரித்திருந்த நிலையில், தற்போது அதை டிரம்ப் செயல்படுத்தியுள்ளார்
‘உலக சுகாதார மையம் தனது அடிப்படையான கடமைகளில் இருந்தும் தவறிவிட்டது. நிர்வாக திறனின்றி, தவறான நடவடிக்கைகள் மூலம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தத் தவறிய உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்படும் நிதி நிறுத்தப்படுகிறது.’ என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அண்டனியோ, ‘சர்வதேச அளவில் ஒற்றுமையுடன் செயல்பட்டால் தான் இந்த வைரஸ் பரவலை தடுத்து நிறுத்த முடியும். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக சுகாதார மையத்திற்கான ஒத்துழைப்பை வழங்க யாரும் மறுக்கக் கூடாது.’ என்று தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு 1948ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார மையம் இயங்கி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பகுதியான இது உலக மக்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. 194 நாடுகள் இதன் உறுப்பினர்களாக இருக்கின்றன.
இந்த அமைப்புக்கான நிதியில், அமெரிக்காவின் பங்கு மிகப்பெரியதாகும். 2018 – 19 ஆம் ஆண்டில் 15 சதவிகித நிதியை அமெரிக்கா அளித்திருக்கிறது. இதில் அதற்கு அடுத்த நிலையில் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அவர்களின் அறக்கட்டளை மூலமாக 9.7 6% நிதி உலக சுகாதார நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
ட்ரம்பின் இந்த முடிவு குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கூறும்பொழுது, இந்த சமயத்தில் உலக சுகாதார நிறுவனத்தில் அளிக்கப்படும் நிதி நிறுத்தப்படுவது மிகவும் அபாயகரமானது என்று தெரிவித்துள்ளார்.
ஆதாரம்: Reuters