முதுமலை வனப்பகுதியில் உயிரிழந்த 5 செந்நாய்கள்.. விஷம் வைத்துக் கொன்றவர்கள் கைது!!

முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனப்பகுதியில் ஐந்து செந்நாய்கள் உயிரிழந்த விவகாரத்தில், அவற்றை விஷம்வைத்துக் கொன்றதாக மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வெளி மண்டலத்துக்குட்பட்ட சிங்காரா வனச்சரகம் பொக்காபுரம் விபூதிமலை வனப்பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 3 முதல் 4 வயது மதிக்கத்தக்க, ஐந்து செந்நாய்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்தன. அவற்றின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு மேற்கொண்டனர். பரிசோதனைக்காக உடல் பாகங்களை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பினர்.
ஆய்வு முடிவில், நஞ்சு கலக்கப்பட்ட மான் இறைச்சியை உண்டதாலேயே செந்நாய்கள் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து சிங்காரா வனச்சரகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பொக்காபுரம், தக்கல் பகுதியைச் சேர்ந்த சிவன், மாதேவன், தொட்டலிங்கி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் செந்நாய்க்கு விஷம் வைத்துக் கொன்றதை இவர்களே ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளைக் கைதுசெய்து, கூடலூர் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த், “ஐந்து செந்நாய்கள் இறந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுவந்தோம். ஆய்வறிக்கையில் விஷம்வைத்துக் கொல்லப்பட்டிருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் மூன்று பேரைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் செந்நாய்க்கு விஷம்வைத்துக் கொன்றதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் மூவரையும் கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.