2 வயது குழந்தையை கதற கதற சித்திரவதை செய்த பாட்டி கைது!

பெங்களூருவில் 2 வயது குழந்தை மீது சூடான மெழுகை ஊற்றி சித்திரவதை செய்த பாட்டியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள சித்தாகுண்டா பாளையத்தில் வசித்துவருபவர் முஜீபா. அவரது மகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தையை பார்த்துக்கொள்வதற்காக மற்றொரு 2 வயது குழந்தையை முஜீபாவின் கண்காணிப்பில் விட்டுச்சென்றுள்ளார். அந்த 2 வயது சிறுவன் மிகவும் சேட்டை செய்வதாக கூறப்படுகிறது.
அவர்களது வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் தேனீக்கள் அதிகம் இருப்பதால் அங்கு செல்லக்கூடாது என முஜீபா பலமுறை அந்த சிறுவனிடம் எச்சரித்துள்ளார். எனினும் அந்த சிறுவன் அங்கு சென்றதால் ஆத்திரமடைந்த முஜீபா, அந்த சிறுவனை தலையில் குட்டுவைத்தும், வயிற்றில் குத்தியும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், அழும் சிறுவனின் கதறல் சத்தம் வெளியில் கேக்காமல் இருக்க டிஸ்யூ பேப்பரை அந்த சிறுவனின் வாயில் அடைத்து, மெழுகுவர்த்தியை ஏற்றி அந்த சிறுவனின் மேல் சூடான மெழுகை ஊற்றி கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் கொடுமையான விஷயம் என்னவென்றால், முஜீபா இவ்வாறு அந்த சிறுவனை தாக்கியதை அந்த குடும்பத்தினர் யாருமே தடுக்கவில்லை. அவர்கள் வீடியோ எடுத்து தங்களது குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

இதனை அடுத்து, முஜீபாவின் இந்த செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், சிலர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், முஜீபாவின் மீது வழக்குப்பதிவு செய்த காவலர்கள், அவரை கைது செய்துள்ளனர். முஜீபா மட்டுமல்லாமல், குழந்தையை சித்திரவதை செய்ததை தடுக்காமல் வேடிக்கை பார்த்த மற்றொரு பெண்ணையும் காவலர்கள் கைது செய்துள்ளனர்.