“யாருடன் கூட்டணி? ; பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்..

சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவு அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பேசிய கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் “ இன்றிலிருந்து தேர்தல் பணியானது துவங்கிவிட்டது. ஜனவரி மாதம் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு யாருடன் கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும். வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் விஜயகாந்த் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார். வரும் சட்டமன்றத் தேர்தல் தமிழகத்துக்கு முக்கியமானது ” என்றார்.
பிரேமலதா இவ்வாறு கூறியுள்ள நிலையில் அமைச்சர் ஜெயகுமார் தேமுதிக உடனான கூட்டணி தொடர்வதாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது “தேமுதிக உடனான கூட்டணி தொடரும். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். வரும் மாதங்களில் கூட்டணி பேச்சுகளாலும் அறிவிப்புகளாலும் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும் என்பதில் ஐயமில்லை” என்றார்.