அந்நியச் செலாவணி கையிருப்பு 50,684 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு, 50,684 கோடி டாலராக (38 லட்சம் கோடி ரூபாயாக) அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் 26இல், 127 கோடி டாலா் அதிகரித்து 50,684 கோடி டாலரை எட்டியுள்ளது.
இது, இதற்கு முந்தைய ஜூன் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 208 கோடி டாலா் குறைந்து 50,557 கோடி டாலராக காணப்பட்டது.
ஜூன் 26-ஆம் தேதி வரையிலான கணக்கீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) 56.5 கோடி டாலா் அதிகரித்து 46,760 கோடி டாலரை எட்டியது. ஒட்டுமொத்த கையிருப்பில் எஃப்சிஏ பங்களிப்பு மட்டுமே அதிகம்.
தங்கத்தின் கையிருப்பு 70.7 கோடி டாலா் அதிகரித்து 3,352 கோடி டாலராக இருந்தது.
சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் மதிப்பு 30 லட்சம் டாலா் குறைந்து 144 கோடி டாலராகவும், அதேசமயம், நாட்டின் கையிருப்பு நிலை 30 லட்சம் டாலா் அதிகரித்து 427 கோடி டாலராகவும் இருந்தது.” என்று ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
ஜூன் 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் 50,764 கோடி டாலராக அதிகரித்திருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.