உயிரைக் காத்த மருத்துவரின் உயிரை எடுத்த மருத்துவமனைகள்…

கர்நாடக ராமநகர மாவட்டம் சிக்கமுடவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர், மஞ்சுநாத் (வயது 50) . அவரது மாமனார் சமீபத்தில் கொரோனா தொற்று காரணமாக இறந்தார். இதைத் தொடர்ந்து, மஞ்சுநாத்துக்கும் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது.
அவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கொரோனா பரிசோதனை முடிவுகளைத் தருமாறு மஞ்சுநாத் குடும்பத்தினர் மருத்துவர்களைக் கேட்டுள்ளனர்.
ஆனால் அந்த மருத்துவமனை மறுத்துவிட்டதால், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, ஏற்கனவே இருந்த மருத்துவமனையிலிருந்து கொரோனா பரிசோதனைக்கான அனுமதி கடிதத்தை கேட்டார்கள். ஆனால், பழைய மருத்துவமனை அனுமதி மறுத்துவிட்டார்கள்.
மூன்றாவது ஒரு மருத்துவமனைக்குச் சென்றார் டாக்டர் மஞ்சுநாத். அவர்களும் அதே கேள்வியை கேட்டார்கள். மஞ்சுநாத்தின் உறவினர்கள் அளித்த விளக்கத்தை எந்த தனியார் மருத்துவமனையும் ஏற்கத் தயாராக இல்லை.
பின்னர், மஞ்சுநாத், பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அவரது உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனைகள் மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கின்றன என்று குற்றச்சாட்டு எழுவது இது முதல் முறை அல்ல. மருத்துவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலையை சொல்ல தேவையில்லை. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு 50 சதவீத படுக்கை வசதிகளை ஒதுக்குமாறு சமீபத்தில் உத்தரவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.