தொடரும் ஆணவக் கொலை.. பெண்ணின் தந்தை மற்றும் தாய்மாமன் கைது!!

கேரளாவில் திருமணமான 90 நாளில் வாலிபரை ஆணவ கொலை செய்த மனைவியின் தந்தை மற்றும் தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு இளமந்தனம் பகுதியை சேர்ந்த தம்பதி ஆறுமுகம்- ராதா. இவர்களது மகன் அனிஸ் (வயது27) கூலி வேலை பார்த்துவந்தார்.
அனிசும் அதே பகுதியை சேர்ந்த பிரபுகுமார் என்பவரின் மகள் ஹரிதா என்பவரும் காதலித்து வந்தனர். பள்ளி படிக்கும்போது தொடங்கிய இவர்களது காதல் தற்போதும் நீடித்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் ஆவர். ஆகவே அவர்களது காதலுக்கு ஹரிதா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
அவர்களது காதல் விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பலமுறை பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 90 நாட்களுக்கு முன்பு அனிஸ்-ஹரிதா ஆகிய இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்பு ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்ட அவர்கள், பாலக்காடு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதையடுத்து இருவரது பெற்றோரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களது திருமணத்திற்கு ஹரிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணம் செய்துவிட்டதால் அனிசுடன்தான் செல்வேன் என ஹரிதா உறுதியாக கூறிவிட்டார்.
அப்போது உனது தாலிக்கு 90 நாள்தான் விலை என ஹரிதாவை பார்த்து அவரது தந்தை மிரட்டியுள்ளார். இதையடுத்து அனிஸ் குடும்பத்தினருடன் ஹரிதா அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பிறகு கணவன்- மனைவி இருவரையும் ஹரிதாவின் குடும்பத்தினர் மிரட்டியபடி இருந்துள்ளனர்.
அதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளனர். ஆனால் அவர்களின் புகாரின் பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அனிஸ், தனது சகோதரர் அருணுடன் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவர்களை ஹரிதாவின் தந்தை பிரபுகுமார், தாய்மாமன் சுரேஷ் ஆகிய 2 பேரும் தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளனர். அருணை அடித்து விரட்டிவிட்டு அனிசை கம்பியால் தாக்கினர். மேலும் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தனர்.
காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவ கொலை செய்த சம்பவம் பாலக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாலக்காடு போலீசார் வழக்குபதிந்து பிரபுகுமார் மற்றும் சுரேசை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருமணமான 90 நாளில் கணவரை இழந்த ஹரிதா கதறினார். அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-
நான் எனது விருப்பப்படி தான் அனிசை திருமணம் செய்துகொண்டேன். எங்களை எனது தந்தை மற்றும் தாய்மாமன் அடிக்கடி மிரட்டினர். ஆனால் எனது கணவரை கொலை செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அதனை பார்ப்பதற்காக நான் வாழ்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கெவின் ஜோசப் என்ற வாலிபர் ஆணவ கொலை செய்யப்பட்டார். அதுதொடர்பாக அவரது மனைவியின் சகோதரர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
கெவின் ஜோசப் கொலைக்கு பிறகு தற்போது அனிஸ் ஆணவ கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.