திருமணத்திற்கு காதலி மறுப்பு; காதலன் துாக்குபோட்டு தற்கொலை!!

புதுச்சேரியில் காதலி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை கொண்டார்.
புதுச்சேரி குருசுக்குப்பம், மரவாடி வீதியைச் சேர்ந்தவர் தேவி,39; அரவிந்தர் ஆசிரமம், சுகாதார திட்டத்தில், சமுதாய செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரதுமூத்த மகன் ஹரிகரன்,21; கடந்தாண்டு, டிப்ளமோ படித்த போது, ஹரிஹரனும், உடன் படித்த பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த 23ம் தேதி, காதலிக்கு போன் செய்து, தான் கார் கழுவும் வேலைக்கு செல்ல உள்ளதாக ஹரிகரன் கூறியுள்ளார்.
அதற்கு, அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர், ஹரிகரன் வேலை செய்யும் இடத்திற்கு சென்ற அந்த பெண், தான் ஒரு டாக்டரை காதலிப்பதாகவும், உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறினார். அதில் அவர்களுக்குள் தகராறு நடந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஹரிகரனை அழைத்த காதலி வீட்டினர், இனி அப்பெண்ணிடம் பேசக் கூடாது என கூறி தாக்கியுள்ளனர். வீடு வந்த ஹரிகரனை அவரது தாய் சமாதானம் செய்தார்.
இந்நிலையில், மதியம் 3:00 மணிக்கு, உடை மாற்றுவதாக கூறி விட்டு அறைக்கு சென்ற ஹரிகரன் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அதனைக் கண்ட குடும்பத்தார், கதவை உடைத்து, ஹரிகரனை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து ஹரிகரனின் தாய் தேவி, தன் மகனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய பெண்ணிடம் விசாரிக்க கோரி புகார் அளித்தார். முத்தியால்பேட்டை போலீசார், தற்கொலை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.