சச்சின் பைலட் பதவி பறிப்பு; காங்கிரஸ் அதிரடி

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், துணை முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெஹ்லட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் அம்மாநில முதல்வர் அசோக் கெஹ்லட்டிற்கும் இருந்து வந்த உரசல் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 16 பேர், ஆட்சியை கலைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், பின்னணியில் பா.ஜ.க. கட்சியும் செயல்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்சிக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டு சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
அசோக் கெஹ்லட், தனக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்தித்ததைத் தொடர்ந்து, மொத்தமுள்ள 200 எம்எல்ஏக்களில், தங்களுக்கு 106 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளது காங்கிரஸ் தரப்பு. எனினும், இன்று காலைகெஹ்லட் முகாமில் இருந்து 3 எம்எல்ஏக்கள் வெளியேறியதாக தெரிகிறது.