தமிழ்நாட்டில் செயின் திருடன்… ஆந்திராவில் சாமியார்!

தமிழ்நாட்டில் செயின் பறிப்பு, திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் சிக்கிய நபர், ஆந்திராவுக்கு தப்பிச் சென்று சாமியாராக வலம் வந்தார். ஒரு இளைஞரிடம் ரூ.10 லட்சம் ஆட்டையை போட முயன்று மறுபடியும் தமிழக போலீசிடம் சிக்கியுள்ளார்.
புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் திருட்டு, வழிப்பறி, செயின்பறிப்பு, மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இவர் போலீசின் பிடியில் இருந்து தப்பிக்க, சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்திற்கு தப்பியோடினார்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கண்டவாணிபள்ளி கிராமத்தில் ஆசிரமம் அமைத்து சாமியாராக பக்கதர்களுக்கு ஆசி வழங்கி வந்துள்ளார். பெயரை ‘சர்வ சரவணமுத்து ரமேஷ்’ என மாற்றிக்கொண்டுள்ளார். ஆசிரம் அருகில் டீ கடை நடத்தி வந்த துளசிநாயர் என்பவர் மகன் ரவீந்திரநாத் (25) என்பவருக்கு சாமியாருடன் பழக்கம் ஏற்பட்டது.
ரூ.10 லட்சம் கொண்டு வந்தால் புதுச்சேரியில் உனக்கு நானே அருகில் இருந்து, தொழில் தொடங்கி வைக்கிறேன்’ என ரவீந்திரநாத்திடம் கூறியுள்ளார். சாமியாரின் ஆசைவார்த்தையை நம்பிய ரவீந்திரநாத் பெற்றோரிடம் கூறி ரூ. 6 லட்சம, கடனாக ரூ.4 லட்சம் என 10 லட்சம் ரூபாய் திரட்டியுள்ளார்.
கடந்த 24-ம் தேதி ரவீந்திரநாத்தை தனது காரில் விழுப்புரம் அழைத்து வந்துள்ளார். அறை எடுத்து தங்கியுள்ளார். ரவீந்திரநாத் அசந்த நேரம் பார்த்து அவர் கொண்டு வந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு காரில் தப்பி ஓடிவிட்டார். காலையில் எழுந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ரவீந்திர நாத் போலீசில் புகார் அளித்தார்.
தீவிர தேடுதலுக்கு பிறகு சரவணமுத்து ரமேஷ் போலி சாமியார் என்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் கண்டமங்கலம் ஒன்றியம் பக்கிரிப்பாளையத்தில் இருந்த போலி சாமியாரை கைது செய்தனர். இளைஞரிடமிருந்து சுருட்டிய பணத்தில் ஒரு இடத்தை பதிவு செய்ய இருந்தது தெரிய வந்தது. ரூ.9.6 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யும் போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் சரவண முத்து ரமேஷ். போலீசார் உஷாராக செயல்பட்டு அதனை தடுத்தனர்.