“டிரம்பைவிட மோசமான முடிவை மோடி சந்திப்பார்..” – மம்தா ஆவேசம்

நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி. டிரம்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் இரண்டு, மூன்று மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, நேற்று ஹூக்ளி மாவட்டம் சஹாகஞ்சில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அதில் பேசுகையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் நாடு முழுவதும் பொய்களையும், வெறுப்புணர்வையும் பரப்பி வருகிறார்கள்.
பிரதமர் மோடி, இந்த நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் ஆவார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு என்ன கதி நேர்ந்ததோ, அதை விட மோசமான முடிவுதான் மோடிக்கு ஏற்படும். வன்முறையால் எந்த பலனையும் பெற முடியாது.
இந்த சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக செயல்படுவேன். பா.ஜனதாவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது. எந்த பந்தும் கோல் கம்பத்தை தொடாது.
நிலக்கரி சுரங்க வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் மனைவியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உள்ளது. இது, நமது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மற்றும் சில வங்காள நடிகர்கள் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தனர்.