மாணவியின் கையை உடைத்த ஆசிரியை மீது போலீசார் வழக்கு..
பள்ளி மாணவியின் கையை உடைத்த ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள கூட்டமசேரியில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மரியாமா.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிகளுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது மாணவி ஒருவர் கணக்கை தவறாக செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை மரியாமா, அந்த மாணவியின் கையில் பிரம்பால் அடித்துள்ளார்.
இதில் மாணவியின் கை வீங்கியது. வலியால் துடித்த மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது கையில் எலும்புமுறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. மாணவி தாக்கப்பட்டது குறித்து அவரது பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியை மரியாமா மீது வழக்கு பதிந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.