காங்கிரஸ் கூட்டணியில் இணைய போகும் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி..
அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி கட்சியான போடோலாந்து மக்கள் முன்னணி வெளியேறி, காங்கிரஸ் கூட்டணியில் இணைய உள்ளது.
அசாம் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎப்) வெளியேறி, காங்கிரஸ் கூட்டணியில் இணைய உள்ளது. ‘அமைதி, ஒற்றுமை மற்றும் மாநில வளர்ச்சிக்காக பணியாற்றுவதற்கும், அசாமில் ஊழல் இல்லாத நிலையான அரசாங்கத்தை கொண்டுவருவதற்கும், போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎப்), மகா கூட்டணியுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளது. பிபிஎப் இனி பாஜகவுடன் நட்பையும் கூட்டணியையும் வைக்காது.
வரவிருக்கும் அசாம் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணியுடன் இணைந்து செயல்படும்’ என பிபிஎப் கட்சியின் தலைவர் ஹக்ரமா மொகிலாரி கூறி உள்ளார்.அசாமில் 2005ம் ஆண்டு உருவான பிபிஎப் கட்சி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பின்னர் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்து ஆட்சியிலும் பங்கெடுத்தது. அதற்கு முன்பு நடந்த 3 தேர்தல்களிலும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது.
126 உறுப்பினர்கள் கொண்ட அசாம் சட்டசபையில், தற்போது 60 எம்எல்ஏக்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. கூட்டணி கட்சிகளான அசாம் கண பரிஷத் கட்சிக்கு 13 உறுப்பினர்களும், பிபிஎப் கட்சிக்கு 11 உறுப்பினர்களும் உள்ளனர். வரும் தேர்தலில் பிபிஎப் கட்சியுடன் பாஜக கூட்டணி வைக்காது என, கட்சியின் நிலைப்பாட்டை அசாம் நிதி மந்திரி கூறினார்.
அதன்படி பிபிஎப் கட்சி வெளியேறி, காங்கிரஸ் கூட்டணிக்கு செல்கிறது. இதன்மூலம் காங்கிரஸ் கூட்டணியின் பலம் அதிகரிக்கும்.