முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி டெல்டா மாவட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 21-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக வந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜேஷ் தாஸ் மீது புகார் கொடுத்த அந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சென்னை நோக்கி காரில் வந்தபோது செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் அதிரடிப்படையுடன் சென்று பரனூர் அருகே அவரது காரை வழிமறித்து புகார் கொடுக்கக் கூடாது என்று மிரட்டியதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
இந்த மிரட்டல்களை மீறி பெண் ஐ.பி.எஸ். அதிகாரி சென்னை வந்து டி.ஜி.பி.யை சந்தித்து புகார் கொடுத்ததை தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பதவி பறிக்கப்பட்ட நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.