தங்க கடத்தல் ஸ்வப்னா, நீதிமன்றத்தில் புதிய தகவல்

கேரளாவில், 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கின் முக்கிய புள்ளியாக கருதப்படும் ஸ்வப்னா, முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரளாவில், கடந்த வாரம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 30 கிலோ பார்சல் தங்கம் சிக்கியது; இதன் மதிப்பு, 15 கோடி ரூபாய். ஐக்கிய அமீரக நாட்டு துாதரக அலுவலகத்தில் பணியாற்றிய சர்ஜித், ஸ்வப்னா ஆகியோர், இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பது தெரிய வந்தது. சர்ஜித் கைது செய்யப்பட்டார்; ஸ்வப்னா தலைமறைவானார்.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஸ்வப்னா, கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன் ஜாமின் மனுவில், “தங்கக் கடத்தல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அப்பாவி. என் மீது குற்றப் பின்னணி எதுவும் இல்லை. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிளை அலுவலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள், இந்த வழக்கில் என்னை சிக்க வைத்துள்ளனர்.துாதரக அலுவலகத்திலிருந்து ராஜினாமா செய்தாலும், அங்குள்ள அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, சில வேலைகளை செய்து கொடுத்து வந்தேன்.
துாதரக அலுவலகத்தில் பணியாற்றும் ரஷீத் காமிஸ் என்பவர், விமான நிலையத்துக்கு வந்திருந்த பார்சலை, சுங்கத் துறை அதிகாரிகள் தர மறுப்பதாகவும், உதவும்படியும், என்னிடம் போனில் பேசினார். பார்சலை தர மறுத்தால், அதை, மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கே திரும்ப அனுப்ப ஏற்பாடு செய்யும்படியும், அவர் வலியுறுத்தினார்.இதற்காக சுங்கத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது தான், என்னை அவர்கள் சந்தேகப்பட்டனர். எனக்கு முன் ஜாமின் அளிக்க வேண்டும்.” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.