ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற விடாமல் தடுத்த செயலாளரை சஸ்பென்ட் செய்த மாவட்ட ஆட்சியர்!

சாதியை காரணம் காட்டி பெண் ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற விடாமல் தடுத்த ஊராட்சி மன்ற செயலாளரை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தம். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் ஊராட்சி மன்றத்தலைவராக உள்ளார். இவரை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தொடக்கப்பள்ளியில் கொடியேற்ற தலைமை ஆசிரியர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில் சென்ற அவரை கொடியை ஏற்ற விடாமல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஹரிதாஸ் உள்ளிட்ட பஞ்சாயத்து அலுவல அதிகாரிகள் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதேபோல, குடியரசு தின விழாவிலும் அவரை கொடியேற்ற விடமால் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தலித் ஊராட்சி மன்ற தலைவரை கொடியேற்ற விடாமல் அவமதித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பான செய்திகள் வெளியானது. இதனை பார்த்த மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து, பட்டியல் இனத்தவர் என்பதால் அமிர்தத்தை கொடியேற்ற விடாத சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு எடுத்துள்ளது.

பின்னர் வழக்கை விசாரித்த ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன். இந்த விவகாரம் தொடர்பாக மூன்று வாரத்தில் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், முன்னாள் தலைவர் ஹரிதாஸ், துணை தலைவர், ஊராட்சி மன்ற செயலாளர் சசிக்குமார் ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், பெண் ஊராட்சி மன்றத் தலைவரை தலைவரை கொடியேற்ற விடாமல் தடுத்த ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மேலும் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்கிய ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமார் மற்றும் துணை தலைவரின் கணவர் விஜயகுமார் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x