வேலை வாங்கித் தருவதாக ரூ.3.28 கோடி மோசடி.. அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 25 பேரிடம் ரூ.3.28 கோடிமோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை பதிவாளராக இருப்பவர் பார்த்தசாரதி. இவரதுமகன் விஸ்வேஸ்வரன். இவர்கள் இருவரும் சேர்ந்து, அண்ணாபல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடமும் பண மோசடி செய்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு புகார்கள் வந்தன.ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன், மதுரையை சேர்ந்த ஆறுமுகம் உட்பட 25 பேர் கொடுத்த பண மோசடி புகார்களின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், விஸ்வேஸ்வரன் சிலரைமுகவர்கள் போல வைத்துக்கொண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி (பிஆர்ஓ) வேலைக்கு ரூ.15 லட்சம், மின்வாரியத்தில் உதவி பொறியாளர் வேலைக்கு ரூ.10 லட்சம், இளநிலை உதவியாளர் வேலைக்கு ரூ.8 லட்சம், ஆசிரியர் வேலைக்கு ரூ.10 லட்சம் என நிர்ணயம் செய்து பணம் வசூலித்தது தெரியவந்தது. அரசு வேலை தேடும் இளைஞர்களிடம் பணத்தைப் பெற்று, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். மின்வாரிய வேலைக்காக பணம்செலுத்தியவர்களுக்கு, நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம், பணிநியமன ஆணை போன்றவற்றை போலியாக தயாரித்து வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
25 பேரிடமும் ரூ.3.28 கோடி மோசடி செய்தது தொடர்பாக பார்த்தசாரதி, விஸ்வேஸ்வரன், ரவீந்திரராஜா, வள்ளி இளங்கோ, ராமசாமி, இளங்கோவன், ஆறுமுகம், ராஜபாண்டி, ராஜு ஆகிய 9 பேர் மீது பண மோசடி, ஏமாற்றுதல் உட்பட 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழக துணைபதிவாளராக இருந்த பார்த்தசாரதியை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.அவரது மகன் விஸ்வேஸ்வரன், தரகர்களாக செயல்பட்ட ஆறுமுகம், ராஜபாண்டி, ராஜு ஆகிய 4 பேரும் கடந்த 2019-ல் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.