இனி வாக்காளர் அட்டை பற்றிய கவலைவேண்டாம்..! வந்துவிட்டது டிஜிட்டல் அட்டை
வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துவிட்டு பல மாதங்களாகக் காத்திருப்போரா நீங்கள்? ஒரு வேளை தேர்தலுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வரவில்லை என்றால் எப்படி வாக்களிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? iஇனி அந்தக் கவலை வேண்டாம். டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டையைப் பெறும் திட்டம் இந்த மாத துவக்கத்தில் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, ஆதார் அட்டையை, ‘ஆன்லைனில்’ பதிவிறக்கம் செய்வது போல், இந்தாண்டு முதல், இ- வாக்காளர் அட்டையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை, தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த மாதம் வெளியான, வாக்காளர் இறுதி பட்டியலில் சேர்ந்த புதிய வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அட்டை எண் அல்லது படிவம் -6 எண்ணை பயன்படுத்தி, ‘ஆன்லைன்’ மூலமாக, ‘இ-எபிக்’ எனும் இ- வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். இந்திய தேர்தல் கமிஷனின், http://votersportal.eci.gov.in / https://www.nvsp.in/ என்ற இணைய முகவரியில், ‘இ- வாக்காளர்’ பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக e-EPIC என பிரத்யேக செயலியை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியின் உதவியுடன், இப்போது வாக்காளர் அடையாள அட்டைகளையும் ஆதார் அட்டைகளைப் போல ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
அடுத்தகட்டமாக, அனைத்து வாக்காளரும் தங்களது ‘இ- வாக்காளர்’ அட்டையை பதிவிறக்கம் செய்து, ‘மொபைல் போனில்’ வைத்து கொள்ளலாம். வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தவர், இதுவரை வாங்காத வாக்காளரும், இச்சேவையை பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, தமிழகத்தில், தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் புதிய வாக்காளர்களுக்கு, இலவசமாக வண்ண வாக்காளர் அடையாள அட்டையை விரைவாக வழங்கும் வகையில், 5 ஆண்டுகளுக்கு தபால் துறையுடன் இந்திய தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, புதிய வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டையை தபால் துறை இலவசமாக விரைவு அஞ்சல் மூலம் வீடுகளுக்கே அனுப்பி வைக்கும்.