உயா்நீதிமன்றங்களின் கேள்வி கேட்கும் அதிகாரத்தைப் பறிக்க முடியாது

புது தில்லி: உயா்நீதிமன்றங்களில் விவாதம் சுதந்திரமாக நடைபெறுவது அவசியம் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், நீதிமன்றங்களின் கேள்வி கேட்கும் அதிகாரத்தைப் பறிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்ற காலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்தது. தொற்று பரவல் அதிகரித்ததற்கு தோ்தல் ஆணையமே காரணம் எனத் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், ஆணையம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது.

தோ்தல் ஆணையத்தின் அதிகாரிகள் மீது கொலைக்குற்றம் சுமத்தலாம் என்றும் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.

அதையடுத்து, உயா்நீதிமன்றங்கள் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பதற்குத் தடை விதிக்கக் கோரியும் நீதிபதிகள் தெரிவிக்கும் அதிகாரபூா்வமற்ற கருத்துகளை ஊடகங்கள் பொது வெளியில் வெளியிடுவதற்குத் தடை விதிக்கக் கோரியும் இந்தியத் தோ்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த பிறகு நீதிபதிகள்கூறியதாவது:

தோ்தல் ஆணையத்தின் மதிப்பை சீா்குலைப்பதற்காக சென்னை உயா்நீதிமன்றம் அதுபோன்ற கருத்துகளை வெளியிடவில்லை. வழக்கு தொடா்பான விவாதம் நடைபெறும்போது சாதாரணமாகவே அக்கருத்தை நீதிபதிகள் தெரிவித்துள்ளனா். அதன் காரணமாகவே, வழக்கு தொடா்பான அதிகாரபூா்வ அறிக்கையில் நீதிபதிகளின் கருத்துகள் இடம்பெறவில்லை.

நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகளை ஊடகங்கள் வெளியிடுவதற்குத் தோ்தல் ஆணையம் தடை கோரியுள்ளது. அவ்வாறு தடை விதிப்பது சரியாக இருக்காது. நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்படும் விவாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்காக விரிவான விவாதங்கள் அவசியமாகின்றன.

தடை விதிக்க முடியாது: விவாதத்தின்போது சில நேரங்களில் நீதிபதிகள் கடுமையாக கருத்து தெரிவிப்பது வழக்கமானதே. முறையாக செய்யப்படாத பணியைச் செய்வதற்காகவே அவ்வாறு கருத்து தெரிவிக்கின்றனா்; சில கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்புகின்றனா். எனவே, உயா்நீதிமன்றங்களின் கேள்வி கேட்கும் அதிகாரத்தைப் பறிக்க முடியாது.

நீதிமன்றங்களில் விவாதம் சுதந்திரமாக நடைபெற வேண்டியது அவசியம். அவற்றைப் பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியம். எனவே, அவற்றை வெளியிடும் விவகாரத்தில் ஊடகங்களுக்கு எந்தவிதத் தடையும் விதிக்க முடியாது என்றனா்.

அதையடுத்து, வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x