உலகின் முதல் பணக்காரராக சாதனை படைத்த அமேசான் நிறுவனர்!!

உலகிலேயே 200 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையுடன், உலக பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்.
ஜெஃப் பெசோஸ்! உலகமே தற்போது வியந்து பேசும் பிசினஸ் மேக்னட் இவர் தான்.. காரணம், உலகிலேயே 200 பில்லியன் அமெரிக்கா டாலர்களைச் சம்பாதித்துள்ள முதல் நபர் என்பது தான். இந்திய மதிப்பில் இந்த சொத்து 15 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால், பல நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. ஆனால், அமேசான் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், அமேசான் நிறுவனத்தின் பங்குகள் 2.5 சதவீதமாக அதிகரித்தது. அத்தியாவசிய பொருட்களைக் கூட ஆன்லைனில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அமேசான் நல்ல லாபம் அடைந்திருக்கிறது. இது தான் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு உயர காரணமாக அமைந்துள்ளது.
56 வயதாகும் ஜெஃப் பெசோஸின் நிகர மதிப்பு இந்தாண்டின் தொடக்கத்தில் 115 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது 204.6 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அவர் உலக பணக்காரர் வரிசையில் சில ஆண்டுகளுக்கு யாரும் தொடமுடியாத இடத்திற்கு சென்றுள்ளார். இம்மதிப்பானது அவருக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கும் பில்கேட்ஸின் சொத்து மதிப்பை விட 90 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகம். பில்கேட்ஸ் சொத்து மதிப்பு 116.2 பில்லியன் டாலராக உள்ளது.

கடந்த ஆண்டில் ஜெஃப் பெசோஸிற்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து நடந்தது. அதில் அவர் நஷ்ட ஈடாக அமேசான் நிறுவனத்தின் 25 சதவிகித பங்குகளை மனைவிக்கு அளித்தார். இந்த விவாகரத்து நடந்திருக்காத பட்சத்தில் அவரது சொத்து மதிப்பு இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஜெஃப்பிடம் இருந்து 25 சதவிகித பங்குகளைப் பெற்ற அவரது மனைவி உலக பணக்காரர் பட்டியலில் 14 இடத்திலும், உலக பணக்காரப் பெண்கள் வரிசையில் இரண்டாம் இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.