ஒருபக்கம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்.. மறுபக்கம் ஐ.டி ரெய்டு.. ராஜஸ்தானில் காங்., ஆட்சி தப்புமா?

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெஹ்லட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது போலவே, ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க, பாஜக சதி செய்வதாக சமீபத்தில் அம்மாநில முதல்வர், அசோக் கெஹ்லட் குற்றஞ்சாட்டினார். ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் 1.5 கோடி ரூபாய் வரை பா.ஜ.க. தரப்பில் விலை பேசப்படுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தற்போது ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதில் முக்கியமானவர், துணை முதல்வர் சச்சின் பைலட். இவருக்கும், அம்மாநில முதல்வர் அசோக் கெஹ்லட்டிற்கும் ஆரம்பம் முதலே உரசல் இருந்து வருகிறது. தற்போது அந்த மோதல் உச்சகட்டத்தை அடைந்து, சச்சின் பைலட் தற்போது வெளிப்படையாகவே எதிர்க்க துவங்கியுள்ளதால், காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரையும் தொடா்புகொள்ள முடியவில்லை.
காங்கிரசிலிருந்து வெளியேறி, சச்சின் பைலட் பாஜகவில் சேர வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் கசிந்தன. ஆனால், இதை சச்சின் பைலட் மறுத்துள்ளார். இதனிடையே, காங்கிரசுக்கு மேலும் சிக்கல் ஏற்படுத்தும் வகையில், ராஜஸ்தானில் மத்திய பா.ஜ.க அரசு, காங்கிரஸ் பிரமுகர்கள் இல்லங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. அங்கு ஆட்சி கவிழும் நிலை இருக்கும் போது, இப்படி வருமான வரித்துறை சோதனை நடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு முதல்வா் அசோக் கெலாட் அழைப்பு விடுத்தாா். ஜெய்ப்பூரில் முதல்வரின் இல்லத்தில் நடக்கவுள்ள இந்த கூட்டத்தை, சச்சின் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பர் என்று தெரிகிறது.