பிஜேபி பிரிவினை அரசியலை பின்பற்றும் நேபாள பிரதமர் ஒளி…

நேபாள நாட்டுக்குப் பிரதமர் என்று ஒருவர் இருக்கிறாரா என்பதைப் பற்றி இந்தியாவில் யாருமே அக்கறை காட்டியதில்லை. ஆனால், இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தின் டீக்கடைகளில்கூட இப்போது பேசப்படும் நபராக மாறியிருக்கிறார் ஷர்மா ஒளி. ‘ராமர் நேபாளி’ என்ற அறைகூவல் மட்டுமே இதற்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. .

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் 335 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இடத்தை சமீபத்தில் நேபாளம் சொந்தம் கொண்டாடியபோது இந்தியா திகைத்தது. ‘எங்கள் மண்ணை இந்தியா ஆக்கிரமிக்கிறது’ என்று குற்றம் சாட்டி, புதிய நேபாள வரைபடத்தில் இந்தப் பகுதிகளையும் சேர்த்து, அந்த வரைபடத்துக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கொடுத்தபோது கட்கா பிரசாத் ஷர்மா ஒளி இந்தியாவில் செய்திகளில் அடிபட்டார்.

அந்த நாள்களில் இருந்தே தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு எதிராகப் பேசிவருகிறார். ‘சீன வைரஸைவிட இந்திய கொரோனா வைரஸ் ஆபத்தானது’ என்றார். நான்கு சிங்கங்கள் கொண்ட இந்தியாவின் அரச முத்திரையை விமர்சனம் செய்தார். பாகிஸ்தானையும் சீனாவையும் மட்டுமே எதிரிகளாகக் கருதிவந்த இந்திய மக்களுக்கு ஷர்மா ஒளி புதிய வில்லன் ஆகியிருக்கிறார்.

வால்மீகி ராமாயணத்தை சம்ஸ்கிருத மொழியிலிருந்து நேபாளியில் மொழிபெயர்த்தவர் கவிஞர் பானுபக்த ஆச்சார்யா. ‘ஆதிகவி’ என்று குறிப்பிட்டு நேபாளிகள் பெரிதும் மதிக்கும் இவரின் பிறந்த நாள் விழா நிகழ்வில்தான் ஷர்மா ஒளி இந்த சர்ச்சையைக் கிளப்பினார். ‘‘நேபாளம் பண்பாட்டு ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. நம் வரலாற்றைத் திரித்துவிட்டார்கள்.

சீதை பிறந்த ஜனக்பூர் புனிதத்தலம் நேபாளத்தில் உள்ளது. அவரை இந்தியாவிலிருந்து ஓர் இளவரசர் வந்து திருமணம் செய்துகொண்டதாக இன்றும் நாம் நம்புகிறோம். ஆனால், ராமர் பிறந்த அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது. ராமர் ஒரு நேபாளி. ‘தோரி’ என்ற கிராமம்தான் நிஜமான அயோத்தி. இந்தியா ஒரு போலி அயோத்தியை உருவாக்கிவிட்டது’’ என்றார்..

‘‘அந்தக் காலத்தில் தொலைதூரத்துக்குச் சென்று திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் எங்கோ இருக்கிறது அயோத்தி. அங்கிருந்து ஓர் இளவரசர் பெண் தேடி நேபாளம் வந்திருக்க முடியுமா?’’ என்பது அவர் எழுப்பும் வாதம். நேபாளத் தொல்லியல் துறை இப்போது தோரி கிராமத்தில் அகழாய்வு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது.

ஷர்மா ஒளியின் கருத்தை நேபாள வரலாற்று அறிஞர் ஜக்மன் குருங் ஆமோதிக்கிறார். ‘‘வால்மீகி ராமாயணத்தில் வர்ணிக்கப்படும் புவியியல் அமைப்பின்படி, நேபாளத்தின் ஜனக்பூர் அருகில்தான் அயோத்தி இருந்திருக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் அயோத்தியிலிருந்து ரதத்தில் ஏறி ஜனக்பூர் வருவதற்கு ஏழு நாள்கள் ஆகும். ஆனால், ராமர் ஒரே நாளில் வந்ததாக ராமாயணம் சொல்கிறது. அது எப்படி சாத்தியம்?’’ என்று கேட்கிறார் அவர்.

இதேபோல் தான் இந்தியாவில் பள்ளிவாசல் இருந்த இடத்தை இடித்து பல பிரிவினைகளை உண்டு பண்ணின சங்குபரிவாரங்கள்.இறுதியாக சரியான நீதி மறுக்கப்பட்டு இந்திய மக்களின் மனசாட்சிக் விரோதமாக கடைசியில் இதை சாத்தியமாக்கின பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ்.

இந்தியாவின் உத்தரகாண்டிலும் நேபாளத்திலும் பரவலாக வசிக்கும் குமோனி பிராமண சமூகத்தில் பிறந்தவர் ஷர்மா ஒளி. நான்கு வயதில் தாயை இழந்தவர், பள்ளிப் படிப்பு கசந்துபோய் 14 வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டார். அப்போது நேபாளம் கொந்தளிப்பான சூழலில் இருந்தது. மன்னர் ஆட்சி நடைபெற்ற நேபாளத்தில், பெயரளவுக்கு ஒரு நாடாளுமன்றம் இருந்தது. 1960-ம் ஆண்டு அதையும் கலைத்துவிட்டு, அரசியல் கட்சிகளை எல்லாம் சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்தார் மன்னர் மகேந்திரா.

அரசின் முடிவுகளை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதே தேச விரோதச் செயலாகக் கருதப்பட்டது. அரசியலே இல்லாத பஞ்சாயத்து ஆட்சிமுறையை அவர் அறிமுகம் செய்தார். இதற்கு எதிராகப் பெரிய போராட்டம் வெடித்தது. நேபாள காங்கிரஸ் கட்சியும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் இதை நடத்தின. ஷர்மா ஒளி வசித்த ஜாபா பகுதியில் இந்தப் போராட்டம் ‘ஜாபா இயக்கம்’ என்ற பெயரில் தீவிரமாக நடைபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அதில் முக்கியப் பங்கெடுத்ததால் 21 வயதில் சிறை சென்றார் ஷர்மா ஒளி.

போராட்டம் சார்ந்த ஒரு கொலை வழக்கில் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள். 14 ஆண்டுகள் கழித்து மன்னரின் பொது மன்னிப்பு பெரும்பாலான அரசியல் கைதிகளுக்குக் கிடைத்து விடுதலை செய்யப்பட்டார். 35 வயதில் சிறையிலிருந்து வந்த அவர், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ராதிகா என்பவரை மணந்துகொண்டார். 1991-ம் ஆண்டு முதன்முதலாகத் தேர்தலில் ஜெயித்து நாடாளுமன்றம் போனார். அப்போது முதல் அவரின் அரசியல் கிராஃப் உயர ஆரம்பித்தது.

அமைச்சர், துணைப் பிரதமர் என்று மேலே மேலே போனார். அந்த நேரத்தில் இந்தியாவின் நண்பனாகவே இருந்தார். நேபாளத்தில் இருந்து சீனாவுக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் ஒன்றை இவர் கடுமையாக எதிர்த்தார். நேபாளத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. ஒன்று, ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி. அதில்தான் ஷர்மா ஒளி இருந்தார். காலப்போக்கில் அதன் தலைவராகவும் உயர்ந்தார். இன்னொன்று, மாவோயிஸ்ட் சென்டர். இதன் தலைவரான பிரசாந்தா, மன்னர் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தியவர்.

இதற்கு சீனாவின் ஆதரவு இருந்தது. பிரசாந்தாவை ஷர்மா ஒளிக்கு பிடிக்கவே பிடிக்காது. கடுமையாக விமர்சனம் செய்வார். ஆனால், அரசியல் நிர்பந்தங்கள் இந்த இரண்டு கட்சிகளையுமே இணைந்து ஆட்சி அமைக்க வைத்தது. 2015-ம் ஆண்டு அமைந்த அந்த ஆட்சியில்தான் ஷர்மா ஒளி முதன்முதலாகப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார். அப்போது நேபாள அரசு புதிய அரசியல் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்திருந்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, மறைமுகமாகப் பொருளாதாரத் தடையை விதித்தது. நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட நேபாளத்துக்கு பெட்ரோல் முதல் உணவுப்பொருள்கள் வரை இந்தியா வழியாகவே செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக இது தடையின்றி நடைபெற்றது. முதல்முறையாக இது தடுக்கப்பட்டதால், நேபாள மக்கள் தவித்துப்போனார்கள். அந்தச் சூழல்தான் ஷர்மா ஒளியை சீனாப் பக்கம் சாய வைத்தது..

ஒன்பதே மாதங்களில் ஷர்மா ஒளியின் ஆட்சி கவிழ்ந்தது. அதைக் கவிழ்த்தவர் பிரசாந்தா. பிறகு பிரசாந்தா பிரதமர் ஆனார். நேபாளத்தில் மீண்டும் இந்திய ஆதரவு அரசு ஒன்று அமைவதை சீனா தடுக்க நினைத்தது. 2017-ம் ஆண்டு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இணைத்து, பொருந்தாத் திருமணம் செய்து வைத்தது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்ற இந்தப் புதிய கட்சிக்கு ஷர்மா ஒளி தலைவர், பிரசாந்தா செயல் தலைவர்.

மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து 2018 பிப்ரவரியில் மீண்டும் பிரதமர் ஆனார் ஷர்மா ஒளி. ‘பிரதமராக இருப்பதால் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என அப்போது ஷர்மா ஒளியை வற்புறுத்தினார்கள். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. காலப்போக்கில் கட்சியில் எதிர்ப்பு பெருகி, ‘பிரதமர் பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும்’ என இப்போது மூத்த தலைவர்கள் குரல் கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தினமும் இதற்காக நடக்கும் பஞ்சாயத்துகள், எப்போது வேண்டுமானாலும் அவர் பதவியைக் காவு வாங்கலாம்.

தன்னைக் கவிழ்க்க இந்தியா சதி செய்வதாக ஷர்மா ஒளி குற்றம் சாட்டுகிறார். ஆனால், ‘‘இவரை ராஜினாமா செய்யச் சொல்லி நாங்கள்தான் கேட்கிறோம்.இந்தியா இல்லை’’என்கிறார் பிரசாந்்தா. ஜனநாயகத்தைப் பொறுத்தவரை நேபாளம் ஒரு குழந்தை. கடந்த 30 ஆண்டுகளில் 25 ஆட்சி மாற்றங்கள். செல்வாக்கான தலைவராக அங்கும் யாரும் உருவாகவில்லை. இந்தியாவுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டிவிட்டு நேபாள தேசியவாதத்தை வளர்த்து, அதன்முகமாகத் தன்னை மாற்றிக்கொள்ள நினைக்கிறார் ஷர்மா ஒளி. அதற்குச் சீனா மறைமுகமாக உதவுகிறது.இந்தியக் குழந்தைகளெல்லாம் சீன பொம்மையை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள். சீனாவோ, ஒரு நேபாள பொம்மையை வைத்து இந்தியாவுக்கு விளையாட்டு காட்டுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x