சாத்தான்குளம் பாணியில் லாக்கப்பில் படுகொலை செய்யப்பட்டுள்ள செல்வமுருகன்…! கண்டனம் தெரிவித்த வேல்முருகன்!!

சாத்தான்குளம் சம்பவம் போல் செல்வ முருகன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன்(40). இவர் கடந்த மாதம் 28ம் தேதி வியாபாரம் சம்பந்தமாக வடலூர் சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி பிரேமா வடலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை போலீசார் வாங்க மறுத்துள்ளனர்.
கடந்த 29ம் தேதி நெய்வேலி நகர போலீசார் செல்வகுமார் மீது திருட்டு வழக்கு போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், 30ம் தேதி செல்வமுருகனை விருத்தாசலம் சிறையில் அடைத்தனர். கடந்த 2ம் தேதி செல்வமுருகன் இறந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அளித்த பேட்டியில், “சாத்தான்குளம் பாணியிலேயே விருத்தாச்சலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணைக் கைதி செல்வமுருகனை காவல் நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். தடையங்களை காவல்துறையினர் அழித்ததாக செய்திகள் வருகின்றன.
சாத்தான்குள தந்தை – மகன் கொலை வழக்கில் நடவடிக்கை எடுத்தது போல், இந்த வழக்கிலும் நடவடிக்கை தேவை. காவல்துறையினரின் மனித உரிமையை மீறிய செயலுக்கு நீதி வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்துள்ளதை நான் வரவேற்கிறேன். உரிய முறையில் சிபிசிஐடி விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொணர வேண்டும். செல்வமுருகனை இழந்து பரிதவிக்கும் குடும்பத்தாருக்கு இழப்பீடும், அரசு வேலையும் வேண்டும்.
செல்வ முருகன் மரணம் தொடர்பாக ஆய்வாளர் மீது 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.பொய் வழக்கில் செல்வ முருகனை கைது செய்து போலீசார் கடும் தாக்குதல் நடத்தி கொன்றுள்ளனர். முந்திரிக்காட்டுக்கு கொண்டு போய் கைதி செல்வ முருகனை போலீசார் தாக்கி உள்ளனர்.” என்றார்.