ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சகணக்கில் பணத்தை இழந்த இளைஞர் தீக்குளித்து தற்கொலை..!

புதுச்சேரி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு முன்பு தனது மனைவிக்கு அவர் பேசிய ஆடியோ நெஞ்சை உருகச் செய்துள்ளது.
மூச்சுக்கு முன்னூறு முறை தனது மனைவியின் பெயரைச் சொல்லி, பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள் என அறிவுரைக் கூறி, கண்ணீருடன் விடை பெற்ற நபர் தான், விஜயகுமார்.
வில்லியனூர் அடுத்த கோர்காடு எல்லையம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த இவருக்கு, மதுமிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
கொரோனா பொதுமுடக்கத்தின் போது பொழுதுபோக்கிற்காக, ஆன்லைன் சூதாட்டத்தை கையில் எடுத்த இவர், நாட்கள் செல்ல செல்ல அதற்கு தன்னை அடிமையாக்கிக் கொண்டார். ஆரம்ப காலத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்த விஜயகுமார், நாளடைவில் தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் இழந்துள்ளார். இதற்காக, நண்பர்கள், உறவினர்கள் என பலரிடமும் கடன் பெற்றதாக தெரிகிறது.
இதனால் நெருக்கடிக்கு ஆளான விஜயகுமார், கடந்த சனிக்கிழமை, தான் தற்கொலை செய்து கொள்வதாக தனது மனைவிக்கு ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். இதையடுத்து, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் விஜயகுமாரை இரவு முழுவதும் தேடினர். மங்கலம் காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர்.
இதனிடையே, கோர்காடு அருகே உள்ள ஏரிக்கரையில், தீயில் கருகிய நிலையில் சடலம் கிடப்பதாக தகவல் வந்ததையடுத்து, உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர்.
முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் விஜயகுமார் என்பதும், சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயகுமார், தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக, அவர் பேசிய ஆடியோவில், குடும்பத்தை பார்த்துக்கோ என்று தனது மனைவிக்கு மட்டும் அறிவுரைக் கூறாமல், ஆன்லைன் சூதாட்டத்தை யாரும் விளையாட வேண்டாம் என்ற பொதுத் தகவலையும் பதிவிட்டுச் சென்றுள்ளார்.