சம்பளத்தை குறைத்த முதலாளி.. கொலை செய்து கிணற்றில் வீசிய தொழிலாளி!

கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி வீட்டு வேலையாளின் சம்பளத்தை குறைத்ததால், அவர் முதலாளியை கொலை செய்து, சாக்கில் கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் நடந்துள்ளது.
டில்லியின் பாபா ஹரிதாஸ் நகரைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (45). பால் பண்ணை வைத்துள்ளார். இவரை ஆகஸ்ட் 10-ம் தேதியிலிருந்து காணவில்லை என ஆக., 12 அன்று அவரது மருமகன் போலீஸில் புகாரளித்தார். அவரை கடைசியாக அவரது வேலைக்காரர் தஸ்லீமுடன் பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில் ஓம் பிரகாஷின் செல்போன் மற்றும் அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. இதனிடையே ஓம் பிரகாஷ் வீட்டு கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். அங்கு சென்று சோதனை செய்த போது ஓம் பிரகாஷின் உடல் சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்டிருப்பது தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து தஸ்லீமை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீஸார், மேற்கு டெல்லியில் பதுங்கியிருந்த அவரை கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், “ரூ.15 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு வியாபாரத்தை பாதித்ததால் எனது சம்பளத்தை குறைத்தார். இது பற்றி கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. என்னை ஓம் பிரகாஷ் கண்ணத்தில் அறைந்தார். அவர் தூங்கச் சென்றபின், அவரை கட்டையால் தாக்கி, கழுத்தை அறுத்தேன். பின்னர் உடலை சாக்கில் திணித்து அருகிலுள்ள கிணற்றில் வீசினேன்.” என்று தெரிவித்துள்ளார்.